Tuesday, October 27, 2009

நீர்க்குமிழி

உருவமில்லாத ஒன்றால் உருவாகி
உலா வருவது
அமைதியாய் வந்து அமைதியாய்
அடங்குவது
மீனின் பேச்சுகளோ பாசியின் இடம்பெயர்வோ
என்று கிணற்றின் ஓரமாய்
என்னை யோசிக்க வைத்தது
கிணற்றை விழிக்கவைத்து
கனவாய் கரைவது
பாசிகளின் தூதுகளை
பகலவனுக்கு படைப்பது
ஆறுகளுக்கு கொலுசுகளே
இவைகள்தான்
சூரியனிடம் கடன்கொண்டு
வர்ணம் உடுத்துகின்றன
காற்று மிரட்டினால்
கரையிடம் புலம்புகின்றன
காலைவைத்தால் கண்ணீர்விட்டு
சாந்தமடைகின்றன
அழகோ அழகு இதன் பயணம்
மெல்ல மெல்ல மங்கை போல்
அசைந்து குறுநடனம் புரியும்
மீன்களை முத்தமிடும்
செடிகளைக் குளிப்பாட்டும்
சூரியனைச் சிறையிடும்
மிதப்பவனவிடம் மையல் கொள்ளும்